நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள அமெரிக்க, ஆப்கானிஸ்தானின் ஒருங்கிணந்த படைகளின் மீது ஆப்கானிஸ்தான் சீருடையில் இருந்த நபர் ஒருவர் தூப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு அமெரிக்க துருப்புகள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு ஆப்கானிஸ்தானிலுள்ள ஷெர்சாத் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க படைகளின் செய்தி தொடர்பாளர் கர்னல் சோனி லெகெட் கூறுகையில், ஆப்கான் சீருடையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அமெரிக்க, ஆப்கான் படை மீது இயந்திர துப்பாக்கியை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாகத் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் ஆறு அமெரிக்க துருப்புகள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் கூறினார். மேலும் இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்களை அடுத்த 24 மணி நேரத்திற்கு அறிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.