Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மோசடி!… பாதிக்கப்பட்ட நபர் புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கனிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி மகன் சிபிசரண் (36). இவர் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இருப்பதாவது “நான் காவேரிப் பட்டிணத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக் கடன் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்தேன். அப்போது வங்கிக்கு அடிக்கடி வந்துசென்ற தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (48) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரிடம் செல்வாக்கு அதிகளவில் இருப்பதாவும், தன் செல்வாக்கை பயன்படுத்தி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களிலுள்ள கலெக்டர் அலுவலகம், ஆவின் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல அரசு துறைகளில் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறினார்.

இதனை உண்மை என நம்பிய நான் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களான சாமல்பட்டியை சேர்ந்த சுதாகர், குரும்பேரி கிராமத்தை சேர்ந்த கண்ணியப்பன், மாதம்பள்ளியை சேர்ந்த சதீஷ்குமார், கேரிகப்பள்ளிகேட்டை சேர்ந்த திருவேங்கடம், உப்பாரபட்டி கவுன்சிலர் வெங்கடாசலம் போன்றோரிடம் அரசுவேலை வாங்கி தருவதாக கூறினேன். இதனையடுத்து அவர்கள் கொடுத்த மொத்தம் ரூபாய்.70 லட்சத்து 30 ஆயிரத்தை கடலூரிலுள்ள வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் வாயிலாகவும், நேரடியாகவும் சிவசங்கரிடம் கொடுத்தேன். அதன்பின் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அரசு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவல்துறையினர் சிவசங்கரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்துவந்த சிவசங்கர், தன் தொழிலை விரிவுபடுத்தவும், குடும்ப செலவுக்கு தேவையான பணம் இல்லாததாலும் திட்டமிட்டு பணத்தை பெற்று வேலை வாங்கி தராமல் மோசடிசெய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.

Categories

Tech |