தர்மபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தர்மபுரி பகுதியில் ஒட்டப்பட்டி முதல் பழைய தர்மபுரி வரை 25 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தர்மபுரி 4 ரோடு மற்றும் புற நகர்-டவுன் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் துவக்கவிழா தர்மபுரி 4 ரோட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமை தாங்கினார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வரவேற்று பேசினார். மேலும் ஒருங்கிணைப்பாளரான கர்ணன் நிகழ்ச்சியில் முன்னிலைவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கலந்துகொண்டு தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் விழிப்புணர்வு ஒலிபெருக்கிகளை தொடங்கிவைத்து பேசினார். அவர் பேசியதாவது “தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து காவல்துறையினருக்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். தர்மபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தால் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தர்மபுரி நகரில் குற்றசம்பவங்களை கட்டுப்படுத்த பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.