சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்ற கடந்த 5- ஆம் தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, இங்கு உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாதவாறு பராமரிக்கும் விதமாக சுகாதார அலுவலர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்களானது பறிமுதல்செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மெரீனா கடற்கரையில் கடந்த 5-ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 61 கடை உரிமையாளர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை மேயர் மகேஷ் குமார், அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.