காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் உட்பட பலர் காஷ்மீருக்கு கடந்த வாரம் சென்றனர். இந்நிலையில், மற்றொரு வெளிநாட்டு குழு இந்த வாரம் காஷ்மீர் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வளைகுடா நாட்டைச் சேர்ந்த தூதர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா, வியட்நாம், வங்கதேசம், மாலத்தீவு, நார்வே உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் ஜனவரி மாதம் காஷ்மீருக்குச் சென்று பார்வையிட்டனர். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்டோபர் மாதம் காஷ்மீருக்குச் சென்று பார்வையிட்டனர். ஆனால், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வமற்ற குழு எனவும் அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்தான் காஷ்மீருக்குச் சென்றதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.