கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சந்தானம். இவருக்கு ராஜவல்லி (80) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு பீமாராவ் (56), ராமாராவ்(50) என்ற 2 மகன்களும், சஞ்சய் காந்தி (54) என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜவல்லி, தன் மகள் சஞ்சய் காந்தி, மருமகளான ராமாராவ் மனைவி கயல்விழி போன்றோருடன் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கூறியிருப்பதாவது “ராஜவல்லிக்கு சொந்தமாக அதித்யா நல்லூர் கிராமத்தில் நிலம் இருக்கிறது. வயது முதிர்வால் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்த ராஜவல்லியிடம், மூத்த மகனான பீமாராவ் கையெழுத்து பெற்று, வேறு ஒருவரிடம் நிலத்தை விற்பனை செய்து விட்டார். இது ராஜவல்லிக்கு தெரியாமல் இருந்தது.
சில நாட்களுக்கு பின் தெரியவந்ததை அடுத்து ஏமாற்றப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே நிலத்தை மீட்க வேறு வழி தெரியாமல் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். அதன்படி தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கூறி, சமாதானம் செய்தனர். அதன்பின் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.