குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். மேலும் பெரியண்ணன் பசு மாடும், கன்று குட்டியும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மின்கசிவு காரணமாக குடிசையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று கணவன், மனைவி ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
அதற்குள் பசுமாட்டை கட்டி வைத்திருந்த குடிசையிலும் தீ வேகமாக பரவி கன்று குட்டி தீயில் கருதி பரிதாபமாக உயிரிழந்தது. அப்போது விரைந்து செயல்பட்டு பசு மாட்டை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். இந்த தீ விபத்தில் குடிசையில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்ததாக தெரிகிறது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.