இலங்கையின் கோரிக்கையை மீறி, சீன நாட்டின் கப்பல் ஹம்பந்தோட்டா என்னும் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தங்களின் யுவான் வாங்-5 என்னும் போர்க்கப்பலானது, இலங்கை நாட்டின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வரவுள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அந்த கப்பல் இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, செயற்கைக்கோள் தகவல்களை திரட்டுவது குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என்று கூறியது.
ஆனால், சீனாவிலிருந்து வரும் அந்த கப்பல், உளவு கப்பல். எனவே, தங்கள் நாட்டிற்கு அதனால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்திடம் கூறியது. எனவே இலங்கை அரசாங்கம், அந்த துறைமுகத்திற்கு வரக்கூடிய கப்பல் பயணத்தை தள்ளி வைக்குமாறு சீன நாட்டிற்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில், இதனை மீறி சீனா, தங்கள் கப்பலை துறைமுகத்திற்கு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் சுமார் 23 ஆயிரம் டன்கள் எடையுடைய அந்த கப்பல் 400 நபர்கள் இருக்கும் குழுவினருடன் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி, நாளை மறுநாள் காலை 9.30 மணியளவில் அந்த கப்பல் துறைமுகத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.