75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அஞ்சல் அட்டைகளில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து மடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் கிரீன்விஸ்டம் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சார்பாக சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் தேசியத் தலைவர்களின் ஓவியங்கள் கொண்ட 75 அஞ்சல் அட்டைகளை பிரதமர்மோடி அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்து மடலாக அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் துவங்கிய கிரீன்விஸ்டம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
அத்துடன் பள்ளி தாளாளர் மு.காஜா மைதீன், செயலாளர் எம்.சம்சுதீன், பொருளாளர் மு.ராஜா முகமது சேட் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் 75 தேசியத் தலைவர்களின் உருவப் படங்களுடன்கூடிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் எம்.டி.ஆர். நகர் தலைமை அஞ்சல் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று பிரதமர் மோடி அவர்களுக்கான தங்களது 75 அஞ்சல் அட்டைகள் வாயிலாக சுதந்திரதின வாழ்த்துச்செய்தி மடல்களை அஞ்சல் அலுவலகத்தின் மூலம் அனுப்பினர். நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் பள்ளிஆசிரியர்கள் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தனர்.