சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் விதமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்பட்டது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் திருவிழா நாளையுடன் முடிவடை இருக்கின்ற நிலையில் நிறைவு விழாவானது நேரு ஒரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகின்றது. 1927 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழா முதன்முறையாக இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. 44வது ஒலிம்பியாட் போட்டி ரஷ்ய நாட்டில் தான் நடப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் கொரோனா தொற்று மற்றும் சில பிரச்சனையின் காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் நடைபெறலாம் என்பதற்கான ஆலோசனைகளும் நடைபெற்றது. இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் நடக்கும் வாய்ப்பு பெற வேண்டும் என அமைச்சர்கக்ளுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான தொகையை தமிழக அரசு செலவு செய்திருக்கின்றது.
வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வீரர்கள் தமிழகத்தில் விருந்தோம்பலை புகழ்ந்து தள்ளி வருகின்றார்கள். இதனால் முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக இருக்கின்றாராம். அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் தமிழகத்தில் நடத்தி விட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மும்மரமாக இருக்கின்றாராம். இதற்காக ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் இப்போதே அதிகாரிகள் பேச தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது. மணற்பாங்காக இருப்பதால் மெரினா கடற்கரை ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவான இடமாகவும் இருக்கிறது. இந்த கடற்கரையை ஒட்டி முன்னாள் தலைவர்கள், வரலாற்று சிறப்புமிக்க தமிழர்களின் உருவ சிலைகள், நினைவிடங்கள் சமாதிகள் அமைந்திருப்பதால் அதன் மூலம் தமிழர் வரலாற்றை உலகறிய செய்ய முடியும். இது போன்ற காரணங்களால் முதல்வர் ஸ்டாலின் இதில் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு கடந்த மே மாதம் தாஷ்கன்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாக குழு கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.முன்னதாக ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஒலிம்பியாட் போட்டி உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டினுடைய மதிப்பும் தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும் உயர்கின்றது என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து தமிழகத்திற்கு தாருங்கள் என மேடையில் வைத்தே பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் காட்டிய இணக்கம் அவருக்கு அளித்த வரவேற்பு போன்றவற்றால் தமிழக அரசை பாஜக மேல் இடம் பார்க்கும் பார்வையிலும் மாற்றம் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் மத்திய அரசும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.