சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி(24). ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் கொலைமுயற்சி உட்பட 10-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ரமேஷ், தன் நண்பர்களான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த வீரா என்ற வீரராகவன்(25), விஜய் என்ற தம் விஜய்(25), ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(27), செங்குன்றத்தை அடுத்த காந்திநகரை சேர்ந்த வினோத் என்ற உருளை வினோத்(22), ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(20) போன்றோருடன் ஆட்டந்தாங்கல் பஜனை கோயில் தெரு ஏரிக்கரை ஓரம் அமர்ந்து மதுஅருந்தினார். இதையடுத்து போதை தலைக்கேறியதும், நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த நண்பர்கள் ரமேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் பலத்த காயமடைந்தார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரோந்து காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரமேஷை 108 ஆம்புலன்ஸ் வாயிலாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து வீரா, விஜய், வெங்கட் ஆகிய 3 பேரை கைதுசெய்தார். மேலும் தலைமறைவாகவுள்ள வினோத் மற்றும் அரவிந்தன் போன்றோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது கைதான 3 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே விசாரணை முடிவில் தான் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.