சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரம் 1-வது தெருவில் மணிமாறன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி(34) என்ற மனைவி இருந்தார். இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இந்நிலையில் மணலி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது கணவன் மணிமாறனை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவரே தன் மனைவியை கொன்றுவிட்டு, மாயமானதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து மணிமாறனை காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது காவல்துறையினரிடம் மணிமாறன் அளித்துள்ள வாக்குமூலத்தில் “என் மனைவி மைதிலிக்கும், அவளுடன் பணிபுரியும் சக ஊழியரான ஜெய்சங்கருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை சம்பவத்தன்று நான் நேரில் பார்த்தேன்.
பின் என் மனைவியிடம் அதுபற்றி கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறினாள். இதன் காரணமாக ஆத்திரமடைந்த நான் அவளை மணலி புதிய மேம்பாலம் கட்டப்படும் இடத்துக்கு அழைத்துச்சென்றேன். அங்கு என் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அருகில் கிடந்த துணி மூட்டைகளை எடுத்து அவளது உடல் மீதுபோட்டு மூடிவிட்டு வந்துவிட்டேன்” என்று அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.