கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை நீலிபாளையத்தில் வசித்து வருபவர் டிரைவர் சக்தி (36). இவரது மகன் ரித்தீஷ் (4) ஆவார். தற்போது நீலிபாளையம் 4 ரோடு பிரிவிலுள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் கோயிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர்லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து லாரியை டிரைவர் கோயில் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டார்.
இதனிடையில் ஹண்டு பிரேக் போடவில்லை எனவும் லாரியின் முன்பக்க டயர் முன் கல் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிகிறது. இந்நிலையில் கோயிலுக்கு முன் சாலை ஓரத்தில் ரித்தீஷ் மற்றும் சிறுவர்-சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று தண்ணீர் லாரி முன்னோக்கி நகர்ந்து சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தது. இதை சற்றும் கவனிக்காக சிறுவன் ரித்திஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
அத்துடன் தீபா ஸ்ரீ என்ற சிறுமி காயமடைந்தார். இது தொடர்பாக தகவலறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.