13ஆவது யு19 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று நிறைவடைந்தது. பாட்செஃப்ஸ்டிரூமில் நடைபெற்ற இறுதி போட்டியில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக கோப்பை வென்று வரலாற்று படைத்தது. இந்நிலையில், இந்தத் தொடரில் அசத்திய 11 வீரர்கள் கொண்ட சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், இந்தியாவிலிருந்து மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஷ்வால் :
இந்த தொடரின் 6 போட்டிகளில், நான்கு அரைசதம், ஒரு சதம் என 400 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்.
ரவி பிஷ்னோய்:
அதேபோல, இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 17 விக்கெட்டுகளுடன் முதலிம் பிடித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோயும் சிறந்த அணியில் தேர்வாகினார்.
கார்த்திக் தியாகி:
இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் இந்த இளம் வயதில் தனது சிறப்பான பந்துவீச்சின் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த கார்த்திக் தியாகி போன்ற பந்துவீச்சாளர்களை பார்ப்பது அரிதிலும் அரிது. இந்தத் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலிதான் ஐசிசியின் இந்த சிறந்த அணியின் கேப்டனாகவும் நியக்கமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் 43 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
யு19 உலகக் கோப்பை அணி: அக்பர் அலி (வங்கதேசம்), இப்ராஹிம் சத்ரான் (ஆப்கானிஸ்தான்), ரவிந்து ரசந்தா (இலங்கை), மகமதுல் ஹசன் ஜாய் (வங்கதேசம்). ஷாஹதத் ஹொசைன் (வங்கதேசம்), நீம் யங் (வெஸ்ட் இண்டீஸ்), ஷஃபிகுல்லாஹ் கஃபாரி (ஆப்கானிஸ்தான்), ரவி பிஷ்னோய் (இந்தியா), கார்த்திக் தியாகி (இந்தியா), ஜெடேன் சீல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), அனில் குமார் (கனடா)
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி இப்பட்டியலில் இடம்பெற்ற 12 வீரர்களும் எதிர்காலங்களில் சீனியர் அணியில் விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.