தாலுகா ஆஃபீஸ் போகாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
ஒருவரது பெயரில் உள்ள சொத்தை இன்னொருவர் பெயரில் கிரையம் முடிக்கும்பட்சத்தில், பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அவ்வாறு அலைந்து திரிந்தாலும் பலருக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் ? லஞ்சம்
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையதளம் மூலம் பட்டா மாற்றிக்கொள்ளும் முறையை தமிழக அரசு நடைமுறை படுத்தியது. இந்த முறையால் லஞ்சம் ஒழிக்கப்படும் என்று மக்கள் பொதுமக்கள் கருதினர்.
ஆனாலும், இணையதளம் மூலம் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று அனைத்து ஆவணங்களின் நகல்களையும் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பலமுறை தாலுகா அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இதனால் பழைய நடைமுறைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற சிக்கலை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது, பத்திரப்பதிவு துறையில் தற்போது பயன்படுத்தி வரும் சாப்ட்வேர் மூலம் பட்டா மாறுதல் பணிகளை வீட்டில் இருந்தபடியே முடிக்கமுடியும். சாப்ட்வேரில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்படும்.
அதாவது, ஏற்கனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா?, சர்வே எண், உட்பிரிவு எண், கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக உள்ளதா? பத்திரத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ளனவா? என்பன போன்று 5 கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள விவரம் கிரையம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவின் போது அளித்த செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும்.
கிரையம் முடித்தவர்கள் http://ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.