இந்தி மொழி கலைஞரான மகாதேவி வர்மா உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் நகரில் கடந்த 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பிறந்தார். கடந்த 1916-ஆம் ஆண்டு மகாதேவி வர்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகும் மகாதேவி வர்மா தன்னுடைய பெற்றோருடனே தங்கியிருந்து அலகாபாத்தில் உள்ள கிராஸ் வெயிட் பெண்கள் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.
இவர் கடந்த 1929-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், கடந்த 1933-ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். இதனையடுத்து 7 வயதிலிருந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்த மகாதேவி வர்மா பள்ளி படிப்பின் போதே கவிதைகளை எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய நீகார் மற்றும் ரஷ்மி ஆகிய கவிதை தொகுப்புகள் நூல்களாக வெளிவந்தன.
இவர் கவிதைகள் எழுதுவதோடு, ஓவியம் வரைதல், உரைநடைகள் எழுதுதல் போன்றவற்றிலும் வல்லவராக இருந்தார். இவர் தீபக்ஷிகா, யாமா என்ற தன்னுடைய 2 படைப்புகளுக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் எழுதிய மாதூர் மேரே தீபக் ஜல் என்ற கவிதை தொகுப்பு 10-ம் வகுப்பிற்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இளமைக்கால சுயசரிதை என்ற கவிதை தொகுப்பு 9-தாம் வகுப்பிற்கு பாடத் தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு நிலகாந்த் என்ற கவிதை தொகுப்பு 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஹிந்தி மொழியில் வெளியான சாயாவத் என்னும் இலக்கிய தொகுப்பில் மகாதேவி வர்மா பெரும்பங்கு வகித்துள்ளார். இந்த சாயாவத் என்னும் இலக்கிய தொகுப்பை சுமிதிரா நந்தன், சூர்யகாந்த் திருப்பாதி நிராலா, ஜெய்சங்கர் பிரசாத் மற்றும் மகாதேவி வர்மா ஆகிய 4 பேரும் எழுதியுள்ளனர்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றிய மகாதேவி வர்மா சுதந்திரப் போராட்ட கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்தார். இவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக ஸ்ருங்கலா கீ கடியா என்ற நூலை எழுதினார். இவருடைய இலக்கியப் படைப்புகளிலும், கவிதை தொகுப்புகளிலும் தத்துவம், ஆன்மீகம், அழகியல், இயற்கை, சங்கமம் போன்றவைகள் ஒரு சேர இடம் பெற்றிருந்ததால், பலராலும் பாராட்டப்பட்டது. இவர் அலகாபாத்தில் ஒரு இலக்கிய மன்றத்தை தொடங்கினார்.
மேலும் இந்தி இலக்கிய கோயிலின் சரஸ்வதி மற்றும் நவீன மீரா என்று அழைக்கப்பட்ட மகாவதி வர்மா ஞான பீட விருது, பத்ம விபூஷன் மற்றும் பத்மபூஷன் விருதுகள், சாகித்ய அகாதமி விருது போன்றவைகளை வாங்கியுள்ளார். இவர் பெண்களுக்காக சாந்த் என்ற பத்திரிக்கையை நடத்தினார். மகா தேவியின் கணவரான முனைவர் ஸ்வருப் நாராயண வர்மா மகாதேவி பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற காரணத்தினால் அவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.