அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அதிமுகவில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்த ஆதாரம் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ?
இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த தலைமை கழகத்தை காலால் எட்டி உதைக்கின்ற போது… 1 1/2 கோடி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நெஞ்சில் உதைப்பதாகும். ஒவ்வொரு தொண்டர்களுடைய நெஞ்சிலே உதைப்பதாக நாம் பார்க்கின்றோம்.
ஏனென்றால் நாட்டுக்காக உழைத்த தலைவர்கள் உருவாக்கிய கட்டிடம். அப்படிப்பட்ட கட்டிடத்தை அத்துமீறி நுழைந்து, பொருள் எல்லாம் தூக்கிக்கொண்டு ஓடியவர் ஒரு தலைவரா? திருட்டுத்தனமாக அங்கே இருக்கின்ற கட்சியினுடைய கட்டிட பத்திரம் அதை எல்லாம் இன்றைக்கு திருடிக் கொண்டு சென்றிருக்கின்றார். இன்றைக்கு நாம் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து, இன்னும் வழக்கு நடக்குது. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம் அப்படிப்பட்ட அரசாங்கம் இந்த திமுகவினுடைய அரசாங்கம்.
யார் வந்தார் ? யார் உடைத்தார் ? யார் அந்த பொருளை கொண்டு போனார் ? என்று எல்லா மக்களுக்கும் தெரியும். ஆனால் இங்கே நாட்டை ஆளுகின்ற ஸ்டாலினுக்கு தெரியவில்லை, அப்படிப்பட்ட முதலமைச்சர்தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்தார்.