விமான நிலையத்தில் தகராறு செய்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகராறு செய்துள்ளார். அந்த நபரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து காவல்துறையினரை தொந்தரவு செய்துள்ளார். அப்போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஒரு காவலர் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த நபரின் விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், வெள்ளையர் அல்லாத ஒரு நபரை சுட்டுக் கொன்றுள்ளனர் என கண்ணால் பார்த்த ஒரு நபர் கூறியுள்ளார். மேலும் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.