குரங்கம்மை நோய் தொற்று பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது. இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும். இந்நிலையில் பிரேசிலில் குரங்கம்மை நோய் தொற்றின் பீதியால் குரங்குகள் அதிக அளவு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நோய் குரங்குகளிடமிருந்து பரவுகின்றது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள் குரங்குகளை கொலை செய்து வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ரியோ டீ ஜெனிரோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாதிரி சம்பவங்கள் நாட்டின் பிற நகரங்களிலும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் குரங்கம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியதாவது, “இப்போது நாம் பார்க்கும் நோய் பரவல் மனிதர்களிடையே உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் நிச்சயமாக விலங்குகளைத் தாக்கக்கூடாது” என கூறினார். மேலும் பிரேசிலில் இதுவரை 1,700 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அங்கு இந்த நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.