அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று ஓபிஎஸ் தரப்பு தங்கள் வாதங்களை வைத்திருந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிபதி முன்பு வாதங்களை வைத்து வருகின்றது. அதில், அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது; பொதுக்குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது.
பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23ஆம் தேதியே பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூலை 11தேதிக்கான பொதுக்குழு நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ஆம் தேதி தயாரிக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
பன்னீர்செல்வம் தரப்பில் தனி நீதிபதி முன்பு, இரு நீதிபதி அமர்விலும் தாக்கல் செய்தது வரைவு தீர்மானம் தான்; நிகழ்ச்சி நிரல் அல்ல. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி காலாவதியாகவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதம் செய்து வருகின்றார்.