இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை கோர முகத்தை காட்டியது. இதனால் உயிர்பலிகளும் பெருமளவில் ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் கொரோனாவால் உயிர் இழக்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பரவுவதை தவிர்க்க கொரோனா தடுப்பூசி பெரும் பங்கு வகித்தது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் படி மும்மராகமாக நடைபெற்றது. ஆனால் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன் வரவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. ஏனென்றால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இதில் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சினர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கோவளம் பகுதியை சேர்ந்த எஸ்.டி.எஸ். ஃபவுண்டேஷன் நிறுவனர் சுந்தரம் என்பவர் தாம் வசிக்கும் பகுதியை கொரோனா இல்லா பகுதியாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார். இதனையடுத்து “கோவிட் இல்லா கோவளம்” என்ற தலைப்பில் சி.என். ராமதாஸ் பவுண்டேஷன், சிராஜ் பவுண்டேஷன் ஆகிய மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து தங்கள் பகுதி மக்களிடையே நாள்தோறும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். குறிப்பாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கொரோனா பரவல் பற்றி எடுத்துரைத்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூடி தடுப்பூசி போட வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் இலவச தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த வருவோருக்கு கூப்பன் ஒன்றை வழங்கி அதனை பூர்த்தி செய்து அதை அங்கிருக்கும் பெட்டி ஒன்றில் போட வேண்டும். அதன் பிறகு வாரம் ஒரு முறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வந்தனர். அதன்படி இலவச இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மொபைல் போன், பட்டுப்புடவை ஆகிய பரிசுகளை வழங்கினார். இதனால் கோவளம் பகுதியில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்தது.