Categories
அரசியல்

சுதந்திர போரட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு என்ன?…. இதோ சில தகவல்கள்….!!!!

தமிழ் இலக்கியத்தின் வரலாறு பாரதியிடம் இருந்துதான் துவங்குகிறது. அந்நாளைய அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டக்காரருமான ஜி.சுப்ரமணியஐயர் நடத்தி வந்த தமிழிலேயே வெளிவந்த முதல் தமிழ்செய்தி நாளிதழுமான சுதேச மித்திரனில் 1905ல் உதவி ஆசிரியராக வேலைக்கு அமர்வதே அன்றைய தேசிய அரசியல் களத்தில் குதிக்கும் காரியம்தான். அந்த நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு தேசய போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். எனினும் பாரதிக்கு விடுதலை என்பது பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு கருத்து ஆகும்.

அவருக்கு விடுதலை என்பது அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை மட்டும் கிடையாது. அவரது சிந்தனையில் விடுதலை என்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து விடுதலை, ஜாதி, மத பேதங்களிலிருந்து விடுதலை, வெற்றுச் சடங்குகளில் இருந்தும், காலம் கடந்த பழம் மரபுகளிலிருந்தும் விடுதலை சொல்லப்போனால் இன்றுவரை நாம் நமக்குள் வாதிட்டுக் கொண்டிருக்கும், ஆனால் அடையமுடியாது கனவு கண்டு கொண்டிருக்கும் இலட்சியங்கள் கொண்ட கருத்தாக்கங்களுக்கான விடுதலை ஆகும்.

இவை அனைத்தும் பற்றித் தான் அவர் கவிதைகள் பேசுகிறது. ருஷ்யபுரட்சி வெற்றியடைந்து, ஜார் அரசன் வீழ்ச்சியுற்றதைக் கொண்டாடி வரவேற்று கவிதையெழுதிய இந்திய துணைக்கண்டத்திலேயே முதல் கவிஞன் பாரதிதான் என்று நினைக்கிறேன். அதே நேரம் புரட்சிக்குப் பிறகு வந்த லெனினின் கம்யூனிஸ்ட அரசு ருஷ்யமக்களை அடக்கியாளக் கையாண்ட வன்முறைக் கொடுங்கோன்மையையும் எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் இந்தியக் கவிஞனும் பாரதிதான் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு பாரதி 1921ல் இறந்தார்.

பாரதியின் பாடல்கள் அனைத்தும் கிராமிய மெட்டுக்களிலும், கர்நாடக ராகங்களிலும் இசை அமைக்கப்பட்டவை ஆகும். பொதுமேடைகளிலும் பாரதியும் உரத்த குரலில் தனது பாட்டுக்களைப் பாடுவார். பிபின் சந்திரபால் சென்னை வந்து மெரீனா கடற்கரையில் பேசிய கூட்டத்தில், பாரதி தன் தேசீய கீதங்களைப் பாடினார். அவருடைய பாடல்களை சிறுதுண்டுப் பிரசுரங்களாக 15,000 பிரதிகள் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. பின் தான் கைது செய்யப்படலாம் என்று தெரிந்ததும், பாரதி புதுச்சேரிக்குத் தப்பிச்சென்றார்.

அங்கு அரவிந்தரும் வந்து சேர்ந்தார். அங்கு பாரதிக்கு கிடைத்த மற்றொருசகா வ.வே.சு. அய்யர் (1881-1925). இந்தியன் சிவில் செர்வீஸில் சேரும் எண்ணத்தோடு லண்டன் சென்ற வ.வே.சு. அய்யர், அங்கு வீர்சாவர்க்காருக்கு வலதுகையானார். இந்திய விடுதலைக்கான வன் முறைப் புரட்சிக்கு இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஹோம் ரூல் லீக்- ஐ உருவாக்கும் முயற்சியில் வீர் சவர்கருக்கு அவர் உதவிவந்தார். அங்கும் தான் சிறைபிடிக்கப்படலாம் எனும் நிலை வந்ததும், லண்டனிலிருந்து தப்பினார். அதனை தொடர்ந்து வராக நேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் எனும் V.V.S. வீர் விக்ரம் சிங்காகி புதுச்சேரி வந்த கதை ஒரு துப்பறியும் கதை சொல்லும் சாகசங்களும், தந்திரங்களும், திகிலும் நிறைந்தது.

இதில் வ.வே.சு. அய்யர் ஒரு இலக்கிய ரசிகர். அத்துடன் லத்தீன், ·ப்ரென்ச், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர் ஆவார். மேலும் கம்பனையும், மில்டனையும் ஒப்பிட்டு காவிய ஆராய்வு எழுதியவர் ஆவார். தமிழுக்கு சிறுகதை வடிவத்தையும், விமர்சனம் என்ற துறையையும், இலக்கிய ஆராய்வையும் வ.வே.சு. அய்யர் அறிமுகப்படுத்தியவர். அதுமட்டுமின்றி கரிபால்டி, குரு கோவிந்த் சிங் என விடுதலைக்காக போராடிய வீரர்களின், சரித்திர புருஷர்களின் வாழ்க்கைச் சரிதங்களை, இளைஞர் மனதில் விடுதலை உணர்வை எழுப்பும் நோக்கத்தோடு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |