Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாரிசு நடிகர் என கலாய்த்த ரசிருக்கு தல ஸ்டைலில் ராணாவின் பதிலடி

சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும், ஸ்டூடியோவும் இருப்பதை சுட்டிக்காட்டி வாரிசு நடிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்து ரசிகரின் கருத்துக்கு தல அஜித் ஸ்டைலில், நடிகர் ராணா பதில் அளித்துள்ளார்.

வாரிசு நடிகர் என ரசிகர் ஒருவர் தன்னை கலாய்த்ததற்கு தல அஜித் ஸ்டைலில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வரும் ராணா டகுபதி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவரது தந்தை சுரேஷ் பாபு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் நிலையில், சுரேஷ் புரொடக்‌ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார்.

ராணாவின் தாத்தா, தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ராமாநாயுடு. அதேபோல் அவரது மாமாவாக மூத்த ஹீரோ டகுபதி வெங்கடேஷும், உறவினராக வளர்ந்து வரும் இளம் ஹீரோ நாக சைதன்யாவும் இருக்கிறார்கள்.

இதையடுத்து ராணா பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தபோதிலும், தெலுங்கு ரசிகர்கள் சிலர் அவரை வாரிசு நடிகர் எனவும், சினிமா பரம்பரையிலிருந்து வந்தவர் எனவும் முத்திரை குத்தி வருகின்றனர்.

தனிப்பட்ட திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் சினிமா பின்னணியை வைத்து, அதை முன்னிருத்துவது ராணா போன்ற சினிமாவை பின்புலமாகக் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளும் மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்துவதாக பலமுறை அவர்களே தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், நாளிதழ் ஒன்றுக்கு நடிகர் ராணா சமீபத்தில் அளித்த பேட்டியை ரசிகர் ஒருவர் கட் செய்து சமூக வலைத்தளபக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பேட்டியின் தலைப்பில், ‘நான் 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன். ஆனால் அது என் கனவுகளை பின்தொடர்ந்து செல்வதில் ஊக்கப்படுத்தாமல் இருந்ததில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில், ‘ஏனென்றால் எனது குடும்பம் தயாரிப்பு நிறுவனமும் மிகப் பெரிய ஸ்டூடியோவும் வைத்திருப்பதால் அது சாத்தியமாயிற்று’ என்று பதிவிட்டு, சினிமா பின்புலத்தினால்தான் ராணா தனது கனவை மெய்பிக்க முடிந்தது என்பதை குறிப்பிடும் விதமாக அவ்வாறு பதிவிட்டார்.

Rana trolled and actor replies

இந்தப் பதிவு ராணா கண்களில் பட, அந்த ரசிகருக்கு தல அஜித் ஸ்டைலில் தக்க பதிலடி அளித்துள்ளார். ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டன்னு அலறுனாலும், நீயா ஒத்துகுற வரை யாராலும் உன்னை ஜெயிக்க முடியாது’ என்று ‘விவேகம்’ படத்தில் சொல்வார் தல அஜித்.

அதேபாணியில், இந்த உலகமே நீங்கள் தோற்றவர் என்று சொன்னாலும் நிறுத்தாமல் உங்கள் கனவை பின்தொடருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தல அஜித்தும் – ராணாவும் ‘ஆரம்பம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். படத்தில் இருவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்த ‘பாகுபலி’ சீரிஸ் படங்களில், பல்லாலதேவன் என்ற கேரக்டரில் தோன்றி, வில்லத்தனத்தில் மிரட்டியவர் ராணா.

தற்போது, ‘ஹாத்தி மேரே ஷாத்தி’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைனா, கும்கி புகழ் பிரபு சாலமன் இயக்குகிறார். படத்தில் புல்கிட் சாம்ராட், விஷ்ணு விஷால், ஸோயா ஹுசைன், கல்கி கோச்சலின் என பலர் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெவ்வேறு நடிகர் நடித்து படம் தயாராகி வருகிறது. படத்துக்கு தமிழில் ‘காடன்’ என்றும், தெலுங்கில் ‘ஆரண்யா’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

Categories

Tech |