வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 75 ஆவது சுதந்திர தினமாக கொண்டாடம் இந்திய நாடு பல்வேறு அம்சங்களில் வளர்ந்து, உலக அரங்கில் வலிமைமிக்க இடத்தில்,பெருமையோடு நிற்கின்றது. அப்படி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நம் நாட்டில் நீதித்துறையில் நடந்த முக்கிய வழக்கு, அதற்கான தீர்ப்பு குறித்தான செய்தி தொகுப்பில் சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு நீங்கா இடம் உண்டு.
30ஆண்டு கால வழக்கு:
30 ஆண்டுகாலம் நடந்த சபரிமலை வழக்கு இந்தியாவை உற்றுநோக்க வைத்தது மட்டுமல்லாமல், கேரளாவில் பெரும் அரசியல் அதிர்வலையை உருவாக்கியது.பிரம்மச்சரிய கடவுளாக இந்துக்கள் வழிபடும் ஐயப்பன் கோவில் கொண்டுள்ள சபரிமலைக்கு ஆண்கள் விரதமிருந்து செல்வது வழக்கம். ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால், பத்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதில்லை.
முதல்முறை நீதிமன்ற படியேறிய வழக்கு:
பெண்களை அனுமதிக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பிய போதிலும், கேரளா அரசுகள் அதற்கு செவிமடுக்கவில்லை. முதல் முதலில் 1990 ஆம் ஆண்டு இந்த விவகாரம் நீதிமன்றத்தின் படி ஏறியது.பெண்களை அனுமதிக்க உத்தரவிடக்கோரி கேரளா நீதிமன்றத்தில் மகேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதே கோரிக்கையுடன், கேரள உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டினார் மகாதேவன் என்பவர்.
முதல் தடை விதிப்பு:
அவரது மனுவை 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்து மத நம்பிக்கை, கேரளா கோவில்கள், சபரிமலை தேவஸ்தான விதி ஆகியவற்றின் படி பெண்களை அனுமதிக்க முடியாது எனவும் கேரள உயர்நீதிமன்றம் கூறியது. இதுதான் சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்ட முதல் நிகழ்வு.
இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு:
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, 2008 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அன்று மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு சென்றது.
வேகம் எடுத்த வழக்கு விசாரணை:
8 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி தேதியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபரிமலை நடைதிறப்பு சமயங்களில் எல்லாம் சர்ச்சையை கிளப்பிய இந்த வழக்கு, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. பிறகு வேகம் பிடித்தது.
கேரள அரசுக்கள்:
2018 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் மிக வேகமாக விசாரணை நடைபெற்று, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி என்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.சபரிமலை வழக்கின் இந்த நீண்ட நெடிய இழுபறிக்கு கேரள மாநில அரசுகளும் ஒரு காரணம். கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு அமையும் போதெல்லாம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்றும், காங்கிரஸ் அரசு அமையும் அமைந்தால் அனுமதிக்க கூடாது எனவும் மாற்றி மாற்றி மனு தாக்கல் செய்தனர்.
2018இல் தீர்ப்பு:
இறுதியாக அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் நரிமன், சந்திரசூட்டு, கனவில்கர், மல்கோத்ரா அமர்வு, சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்தது. நீதிபதி மல்கோத்ரா மட்டும் பெண்களை அனுமதிக்க கூடாது என தீர்ப்பு கூறினாலும், நான்குக்கு – ஒன்று என்ற பெரும்பான்மை அடிப்படையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவு அமலுக்கு வந்தது.
உறுதி காட்டிய கேரள கம்யூனிஸ்ட் அரசு:
உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போகும் நிலைப்பாட்டை எடுக்க, பெண்களை அனுமதிப்பதில் கேரளா கம்யூனிஸ்ட் அரசு உறுதியாக இருந்தது. இந்த தீர்ப்புக்கு பின்னர் பலத்தை எதிர்ப்புகளுக்கு இடையே பெண் ஒருவரும், இதனை தொடர்ந்து சில பெண்கள் அமைப்பினரும் சபரிமலை வரை சென்று வந்ததால், கேரளாவில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.
மறுபரிசீலனை:
இதன் பிறகு ஐந்து நீதிபதிகள் தீர்ப்பை மறுபரிசனை செய்ய கோரி, நாயர் சர்விஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகளும், பல்வேறு தனிநபர்களும் உச்சநீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அமர்வு, 2019ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்து அமர்வில் இருந்த அதே நீதிபதிகள் தான், இந்த அமர்விலும் இருந்தனர். தலைமை நீதிபதி மட்டும் தீபக் மிஸ்ராவுக்கு பதில் ரஞ்சன் கோக்காய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கிய வழக்கு, சபரிமலை வழக்கு:
இதுபோல அயோத்தி வழக்கில் ராம் லல்லா அமைப்புக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பராசரன் தான், இந்த வழக்கிலும் நாயர் சர்விஸ் சொசைட்டிக்காக ஆஜராகினார். அயோத்தி போலவே சபரிமலை வழக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவும், இந்த தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தது.