குளிர்பிரதேச பகுதிகளான ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் சமீப காலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் கடும் வெப்ப அலைகளை சந்தித்த அந்நாட்டில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் பல இடங்களில் அதீத வெப்பம் நிலவும், என்றும் புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் அதிகமாக உயரலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் இங்கிலாந்தை சுற்றியுள்ள அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் இருக்கும்.
1935 ஆம் ஆண்டுக்கு பின்னர், கடந்த ஜூலை மாதம் தான் இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஜூலையாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் இங்கிலாந்தின் தீயணைப்பு துறை மிகுந்த சிரமத்திற்குள்ளானது. இத்தகைய கடுமையான வெப்ப சீதோஷ்ண நிலையை இதுவரை கண்டறியாத இங்கிலாந்தில், வெயிலின் தாக்கத்தால் விமான ஓடுதள பாதிப்பு, ரெயில் சிக்னல் பாதிப்பு என பல பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டாம் உலகப்போருக்கு பின், இப்போது தான் இவ்வளவு தீவிரமாக, ஓய்வில்லாமல் பணியாற்றியதாக அந்நாட்டு தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தண்ணீர் வழங்கி வரும் நிறுவனங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.