Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் மாண்டேஜில் இடம்பிடித்த இசைப்புயலின் ஜெய் ஹோ பாடல்..!

92வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் மான்டேஜ் விடியோவில் பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரேவின் பதர் பஞ்சாலி, ஏஆர் ரஹ்மான் ஜெய் ஹோ பாடல்கள் இடம்பிடித்தது ரசிகர்களிடையே மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சலிஸ்: உலக சினிமாக்கள் கொண்டாடப்பட்ட ஆஸ்கர் விருது நிகழ்வில் இந்திய சினிமாவை இணைக்கும் விதமாக சத்யஜித்ரேவின் பதர் பஞ்சாலி காட்சி, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ பாடல் ஆகியவற்றின் மான்டேஜ் விடியோ காட்சியில் காட்டப்பட்டது.

மறைந்த பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரே இயக்கிய முதல் படம் ‘பதர் பஞ்சாலி’. இவர் இயக்கிய பதர் பஞ்சாலி, அபராஜிதோ, தி வேர்ல்ட் ஆஃப் அபு ஆகிய 3 படங்கள் இந்திய சினிமா வரலாற்றில் சிறந்த படங்களாக வர்ணிக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர் பிபூதிபூஷன் பந்தோபாத்யாய் எழுதிய இரண்டு நாவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

‘தி அபு ட்ரையாலஜி’ என்று அழைக்கப்பட்ட இந்தப் படங்கள் தேசிய விருது மட்டுமில்லாமல், பல்வேறு உலக சினிமா விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்தது. 1991ஆம் ஆண்டு 64வது ஆஸ்கர் விருது நிகழ்வில் இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, அண்மையில் நடந்து முடிந்து 92வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சத்யஜித்ரேவின் முதல் படமான ‘பதர் பஞ்சாலி’ படத்தில் இடம்பெறும் காட்சிகள், ஆஸ்கர் விருதுக்கான மான்டேஜில் காட்டப்பட்டது.

உலக அளவில் புகழ்பெற்ற ஆமர், தி இன்டச்சபிள்ஸ், ஏ செபரேஷன், இன் தி மூட் ஆஃப் லவ், ஏமிலி போன்று பல படங்களின் காட்சிகளும் இதில் இடம்பிடித்தன.

இதேபோல் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், 2008இல் வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இடம்பிடித்த ஆஸ்கர் விருது வென்ற ‘ஜெய் ஹோ’ பாடலும் காட்டப்பட்டது.

சிறந்த இசை, சிறந்த பாடல் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் பாடலுக்காக பெற்றார். மேலும், டைட்டானிக் படத்தில் இடம்பிடித்த மை ஹார்ட் வில் கோ ஆன், ராக்கி படத்தில் இடம்பிடித்த ஐ ஆஃப் தி டைகர் போன்ற பாடல்களும் மான்டேஜ் காட்சியில் தோன்றின.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் கதாநாயகனாக, சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகளை தென்கொரியா படம் ‘பாராசைட்’ பெற்றது. இதையடுத்து இந்திய படங்கள், இந்தியாவை இணைக்கும் விதமாக படங்களோ, கலைஞர்களோ ஆஸ்கர் விருதை பெறாத நிலையில், சத்யஜித்ரே படக்காட்சி, ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் காட்சி ஆஸ்கர் மான்டேஜில் இடம்பிடித்திருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |