2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை புத்தர் நகர் பகுதியில் துவாரகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் துவாரகேஷும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான சக்திவேல் என்பவரும் நிதி நிறுவனத்தின் வேலையாக பேரணாம்பட்டு சென்றுவிட்டு குடியாத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது துவாரகேஷ் வந்த மோட்டார் சைக்கிளும் எருக்கம்பட்டு கிராமத்தில் வசிக்கும் கம்பிகட்டும் தொழிலாளர்களான முருகேசன், துளசி நாதன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் துவாரகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த 3 பேரையும் உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து துவாரகேஷின் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.