திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் அங்குள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்தவகையில் அமிர்தக்கவி, நடராஜன் ஆகிய இரண்டு விவசாயிகளின் நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த நிலத்தில் 2 எண்ணெய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெயை எடுத்து வரும் சூழலில் தற்போது மூன்றாவது கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு நில உரிமையாளர்கள் மற்றும் சக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி அவர்கள் கூறுகையில், கச்சாஎண்ணெய் எடுப்பதன் மூலம் விளைநிலங்கள் மோசமான நிலையை அடைந்து வருகிறது.
இதை மேலும் தொடர்ந்தால் விவசாயம் அழிந்து விடும். மேலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்படவேண்டிய மாவட்டமாக அறிவித்த பின்பு மூன்றாவது எண்ணெய் கிணறு அமைக்க முற்படுவது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காகவா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து ONGC நிறுவனர்களிடம் கேட்கையில் நிலம் எங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. எண்ணெய் எடுக்க அனுமதி உள்ளது. உயரதிகாரிகள் அறிவுரைக்கு பின் நிறுவனம் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.