தஞ்சாவூர் அருகே காதல் மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியையடுத்த ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் இளையராஜா வேலைபார்த்து வர சங்கீதா தனது தாயார் வீட்டில் தங்கி மகன் மகளை படிக்க வைத்துள்ளார்.
இவ்வாறு இருக்க கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் மூன்று நாட்களுக்கு முன்பு சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொள்ள இளையராஜா முயற்சித்தபோது அவரது என் பிசியாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் செல்போனிலேயே தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் தகராறு முற்றியது.
இதையடுத்து சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து திரும்பி பார்த்த இளையராஜா மாமியார் வீட்டிற்குச் சென்று மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி தாக்கி தப்பி ஓட, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு, வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணவன் இளையராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.