சென்னை அருகே மன்னிப்பு கேட்க வந்த நபரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நம்மாழ்வார்பேட்டை KH சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடந்த 4ஆம் தேதி குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறு செய்துள்ளார். பின் அன்று மாலையே போதை தெளிந்த பிறகு தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் அவரை மடக்கி பிடித்து கட்டிபோட்டு வசந்தகுமாரை தாக்கி, தலையை மொட்டை அடித்து காலில் சூடு வைத்து டார்ச்சர் செய்துள்ளனர்.
மேலும் இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டி அனுப்பியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து தலைமை செயலக காலனி காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், சம்பவம் தொடர்பாக வசந்தகுமார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வசந்த குமாரை கொடுமைப்படுத்திய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.