சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே.சாலையிலுள்ள குப்பைத் தொட்டியில் சணல்பையிலிருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கவ்வியிழுத்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் காவகத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர். அதன்பின் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்தநிலையில் பிறந்த குழந்தையை அவருடைய கணவர் தனுஷ் குப்பைத்தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது.
இதனால் தனுசை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனுஷ் காவல்துறையினரிடம் கூறியதாவது “எனக்கு கவிதா 2வது மனைவி ஆவார். முதல் மனைவி இறந்து விட்டார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதனிடையில் நான் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அதனை தொடர்ந்து வெளியே வந்தவுடன் கூலிவேலைக்கு சென்று திருந்தி வாழ்கிறேன். இந்நிலையில் 2வது மனைவிக்கு பிறந்த குழந்தையும் இறந்து விட்டதால் என்னால் துக்கம் தாங்க முடியாமல் ‘டாஸ்மாக்’ கடைக்கு சென்று மது அருந்தினேன். இதற்கிடையில் குழந்தையை அடக்கசெய்ய வேண்டும் எனில் ரூபாய்.3 ஆயிரம் செலவாகுமே..? என எண்ணினேன். ஆனால் என் பாக்கெட்டில் ரூபாய்.150 மட்டுமே இருந்தது.
அதன்பின் 10 ரூபாய்க்கு சணல்பையை வாங்கி, அவற்றில் குழந்தையை போட்டு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்தேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக தனுசுக்கு உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் ஆறுதல் கூறினார். அத்துடன் சென்னை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்த காக்கும் கரங்கள் அமைப்பில் உள்ள உறவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக பச்சிளம் குழந்தையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் பச்சிளங்குழந்தை உடல் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையிலான காவல்துறையினரின் மனிதநேய செயலை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.