நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்கள் குழாய் தண்ணீரின்றி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பிரான்ஸ் திணறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இந்த கோடை காலத்தில் இரண்டாவது முறையாக காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றது. தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகின்றது. ஆனால் 100க்கும் மேற்பட்ட வறண்டு கிடக்கும் நகராட்சிகளுக்கு, அவற்றின் சப்ளையை ரேஷன் செய்யக்கூட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகின்றது. இதுகுறித்து வரலாறு காணாத நெருக்கடி என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியதாவது, “பெரும்பாலான சமூகங்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவசரத்திற்காக ஊத்து குடிநீரை மக்கள் எதிர்பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் காட்டுத்தீ வியாபித்துள்ளது விவசாயம் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளும் அவசரகால நடவடிக்கைகளின் கீழ் இருப்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஐரோப்பா முழுவதும் வியாபிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரைனில் நீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது, இதனால் டச்சு துறைமுகங்களுக்கு எண்ணெய் மற்றும் நிலக்கரியின் அத்தியாவசிய சரக்கு விநியோகம் பெரும் தடையை ஏற்படுத்துகின்றது. இது ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்று கூறுகின்றனர். இது மட்டுமின்றி, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் உள்ள ஒரு ஆற்றில், குறைந்த நீர்மட்டம் மற்றும் நச்சு இரசாயனங்கள் கலந்ததன் காரணமாக ஐந்து டன்கள் இறந்த மீன்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இத்தாலியின் போ நதி வரலாற்றில் மிகக் குறைவான நீர் மட்டத்தை பதிவு செய்துள்ளது. அதே சமயத்தில் ஸ்பெயினும் காட்டுத்தீ மற்றும் வறட்சியால் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.