ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வசித்து வருபவர் முகமது அனிஷ் (30). இவர் சத்தி மெயின் ரோட்டிலுள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிபவர்கள் சலீம் (25), பசீர் (28). இந்நிலையில் 3 பேரும் முகமது அனிஷ் வீட்டுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை முகமதுஅனிஷ் ஓட்டினார். இந்த நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து கார் மீது மோதிவிட்டது. இதனால் தலைகுப்புற கவிழ்ந்த கார் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விபத்து ஏற்பட்டதும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காரின் பின்னால் உட்கார்ந்து வந்த சலீம், பசீர் போன்றோரை கண்ணாடியை உடைத்து மீட்டனர். ஆனால் முகமது அனிஷை மீட்க முடியவில்லை. இதன் காரணமாக பொக்லைன் எந்திரம் மூலம் பேருந்தில் இருந்து காரை இழுத்து முகமது அனிஷை மீட்டார்கள். இதற்கிடையில் இந்த விபத்தில் 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.