பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே ரோஜா நகர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு ஈமு கோழி பண்ணையை தொடங்கி அதை நடத்தி வந்துள்ளார். இதில் சாந்தி, செல்வம், புவனேஸ்வரி மற்றும் லோகநாதன் ஆகியோர் வேலை பார்த்தனர். இந்த நிறுவனமானது 1.70 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 6 கோழிகள் மற்றும் குஞ்சுகள், மாதம் ரூ. 6,000 ஊக்கத்தொகை தருவதாக அறிவித்தது. இதை நம்பிய 140 முதலீட்டாளர்கள் கோழிப்பண்ணையில் முதலீடு செய்தனர். அவர்கள் மொத்தம் ரூ. 5 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் பண்ணை நிர்வாகம் அறிவித்தது போன்று ஊக்கத்தொகையோ, முதலீடு செய்த பணத்தையோ திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விஜயக்குமார் என்பவர் காவல் நிலையத்தில் செல்வகுமார் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வகுமாருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ. 5 கோடிய 60 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.