மாற்றுத்திறனாளி மாணவருக்காக சோலார் மோட்டார் சைக்கிள் வடிவமைத்து தேனி அரசு ஐடிஐ மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள குரியம்மாள்புரத்தைச் சேர்ந்த அழகுசிங்கம் என்பவரின் மகன் கார்த்திகேயன். இவர் நடக்க முடியாத மாற்று திறனாளி. இவர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றார். இவரால் நடக்க முடியாததால் தினமும் தந்தை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தூக்கிச் வந்து வகுப்பறையில் விட்டு செல்வார்.
இதைப் பார்த்த தொழிற்பயிற்சியில் பயிலும் மின்சார பணியாளர் மாணவ-மாணவிகள் நித்யா, பொன்மொழி, மகாலட்சுமி, புனிதா, கவிதா, சுவிதா, கற்பகம், லோகானந்தா, பிரகாஷ், செல்வகுமார், அருண்கணேஷ், சுரேந்திரன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் கார்த்திகேயனுக்கு உதவி செய்ய முயன்று பிரத்தியேக மோட்டார் சைக்கிளை வடிவமைத்தார்கள்.
அதற்கு தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர், பயிற்றுனர் மோகன் குமார் உள்ளிட்டோர் வழிகாட்டினார்கள். இதற்கான செலவினங்களை மாணவ-மாணவிகள் தங்களின் சொந்த செலவில் மேற்கொண்டார்கள். இதன் மூலம் சோலார் மோட்டார் சைக்கிளை உருவாக்கினார்கள். இந்த பிரத்தியேக மோட்டார் சைக்கிளை மாணவ-மாணவிகள் முன்னிலையில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் பயிற்றுநர்கள் சேர்ந்து கார்த்திகேயனிடம் நேற்று வழங்கினார்கள். மேலும் இதை வடிவமைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.