Categories
மாநில செய்திகள்

இதற்காக செலவு செய்வது இலவசம் ஆகாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் மாணவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தமிழகம் முழுதும் நான் சுற்றி சுழன்று பணிபுரிந்து வந்தாலும் என் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வருகிறபோது நான் அடையக்கூடிய மகிழ்ச்சி என்பது எண்ணிலடங்காது. ஒரு கல்லூரி என் தொகுதியில் அமைந்து இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை மற்றும் கூடுதல் மகிழ்ச்சி. இந்துசமய அறநிலையத்துறையின் சார்பாக 10 கல்லூரிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு சென்ற வருடம் தமிழக சட்டப் பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு வாயிலாக வெளியிடப்பட்டது.

உண்மையை கூறவேண்டும் எனில் கோரிக்கை வைக்காமலேயே அமைச்சர் அதனை நிறைவேற்றி தந்திருக்கிறார். இதனால் அவருக்கு நன்றியை இந்த தொகுதி மக்களின் சார்பாக தெரிவிக்கிறேன். பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முதல்வராக இருக்கக்கூடிய நான் யாரி டம் கோரிக்கை வைப்பது..? அதனால் தான் 10ல் ஒரு கல்லூரியை நான் கோரிக்கை வைக்காமலேயே அமைச்சர் நம் தொகுதிக்கு நிறைவேற்றி கொடுத்துள்ளார். கல்வியானது அனைவருக்கும் எளியமுறையில் கிடைத்து அனைவரும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு மாணவ சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய உண்மையான அக்கறை ஆகும்.

இதற்கிடையில் இலவசம் வேறு, நலத் திட்டங்கள் வேறு என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்ததை நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். இதுகுறித்து நாட்டில் தற்போது பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனெனில் கல்வி அறிவுநலம் சார்ந்தது ஆகும். இரண்டிலும் போதிய அளவுக்கு மக்கள் நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என இந்த அரசு நினைக்கிறது. இலவசம் என்று சொல்கிறபோது நீங்கள் இதைத் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன், பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி, மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்கள் அனைத்துமே மக்கள்நல திட்டங்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இலவசதிட்டங்கள் அல்ல. சமூகநல திட்டங்கள் ஆகும். ஏழை-எளிய விளிம்புநிலை மக்களுக்கு உதவிசெய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறது. இலவசங்கள் கூடாது என சிலர் அறிவுரை சொல்வதற்கு புதியதாக வந்திருக்கிறார்கள். அது குறித்து நமக்கு கவலையில்லை. இதற்குமேல் நான் பேசினால் அது அரசியலாகிவிடும். ஆகவே இதுபற்றி நான் அதிகம் பேசவிரும்பவில்லை” என்று கூறினார்.

Categories

Tech |