Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

திருக்குறளை மேற்கோள் காட்டி, விஜய் ரசிகர் திருமங்கலத்தில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி குறித்து எதுவும் விஜய் அறிவிக்காத நிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நிர்வாகிகள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பிற கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பிகில்’ பட விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர், கடந்த வாரம் திரைப்படத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் நடிகர் விஜய்யை மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.

வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனையில் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேவேளையில் நடிகர் விஜய்யிடமிருந்து எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நடிகர் விஜய், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். வருமான வரி சோதனைக்குப் பின்னர், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே அதிகளவிலான விஜய் ரசிகர்கள் திரண்டனர். தொடர்ந்து படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியில் வரும்போது, நடிகர் விஜய் தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வேன் மீது ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள், வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ‘உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விஜய் கட்சி குறித்து எதுவும் அறிவிக்காத நிலையில், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ரசிகர் அடித்துள்ள இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |