இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார்.
இவர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலி முகத்திடலில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொது மக்கள் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் தற்போது கோத்தப்பய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததால், அங்கிருந்து தாய்லாந்துக்கு சென்று தஞ்சம் அடைவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோத்தப்பய ராஜபக்சே தாய்லாந்துக்கு வரலாம் என ஏற்கனவே அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் கோத்தப்பைய தனி விமானம் மூலமாக தாய்லாந்திற்கு சென்றார். இவர் பாங்காக் விமான நிலையத்திற்கு சென்றவுடன், அங்கிருந்து ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஹோட்டலின் பெயரை பாதுகாப்பு கருதி வெளியே சொல்லவில்லை. மேலும் தாய்லாந்தில் 3 மாதங்கள் வரை தங்கியிருக்க முடிவு செய்துள்ள கோத்தப்பய, 3 மாதங்கள் முடிவடைந்த பிறகு வேறொரு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுவார் அல்லது இலங்கைக்கு மீண்டும் திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.