சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த 2 பேர், தாங்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திலிருந்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசின் தடையைமீறி பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கடையில் விற்பனை செய்வதாக கூறிய அவர்கள் இருவரும் ரூபாய்.30 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் அபராதம் வசூலிப்பதற்கான ரசீது புத்தகம் எதுவும் அவர்களிடம் இல்லை.
இதன் காரணமாக சந்தேகமடைந்த மிட்டல் லால், உடனே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தார். அதன்படி அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. அத்துடன் இருவரும் மாநகராட்சி அதிகாரிகள் இல்லை என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி சாந்தகுமாரி என்ற பெயரில் ஒரு விசிட்டிங் கார்டு வைத்திருந்ததும், அதனை வணிக நிறுவனங்களில் காண்பித்து சோதனை நடத்துவது போல் நடித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்காக அபராதம் விதிப்பதாக பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. அவ்வாறு இந்த இருவரும் பாரிமுனை, மண்ணடி, கொத்தவால்சாவடி, சவுகார்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்களில் சென்ற சில நாட்களில் மட்டும் சுமார் ரூபாய்.4 லட்சம் வசூல் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், விசிட்டிங் கார்டில் குறிப்பிடப்பட்ட சாந்தகுமாரி எனும் பெயரில் யாரும் பின்னணியில் இருக்கிறார்களா..? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.