உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரங்களில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷ்யா தடுப்பதாக உக்ரைனின் சுகாதார மந்திரி விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது “6 மாத காலப் போரில் ரஷ்யா சரியான மனிதாபிமான வழித்தடங்களை அனுமதிக்கவில்லை. அந்த வழித்தடங்கள் வாயிலாக தேவைப்படும் நோயாளிகளுக்கு எங்களால் மருந்துகளை வழங்க முடியும். இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவால் உள் நோக்கத்துடன் எடுக்கப்படுகிறது என நாங்கள் நம்புகிறோம். அத்துடன் அவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் என நாங்கள் கருதுகிறோம். அவை ஆவணப்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என கூறினார்.