அமைச்சர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குசீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் வீர மரணம் அடைந்தார். இவருடைய உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் மதுரைக்கு சென்றார். இவர் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திடீரென சிலர் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினர் 4 பேரை கைது செய்ததோடு, 24 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக நிதி அமைச்சரின் காரின் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அநாகரிகமானது.
வட மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை பாஜகவினர் தற்போது தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். பாஜகவினரின் இந்த தரம் தாழ்ந்த வன்முறை போக்கை கண்டிக்கிறேன். இந்தியாவிலேயே தாங்கள்தான் தேசபக்தி உடையவர்கள் போன்று பாஜகவினர் தங்களுக்கு தாங்களே தம்பட்டம் அடித்து கொள்கின்றனர். நம்முடைய நாட்டிற்காக வீர மரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் கலவரத்தை தூண்டிய பாஜகவினரின் செயல் மிகவும் கீழ்த்தரமானது. வெட்கக்கேடானது. தமிழக நிதி அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பை வீசி தாக்குதல் நடத்தி தமிழக அரசை அவமதித்தது மட்டுமின்றி நாட்டிற்காக உயிர் நீத்த வீரரின் தியாகம் மரணத்தையும் அவமதித்துள்ளனர். இந்த அற்பத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.