ஆஸ்திரேலியா நாட்டில் கேன்பெர்ரா என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை அடுத்து, மத்திய காவல்துறை படை
அதிரடியாக செயல்பட்டு விமான நிலையத்திலிருந்த பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 ரவுண்டுகள் வரை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை அடுத்து விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் கேன்பெர்ரா விமான நிலையத்தில் உள்ள சுவர்களில் குண்டுகள் துளைத்துள்ளன. அதே சமயத்தில் ஜன்னல் கண்ணாடிகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து ஆலிசன் என்ற பெண் பயணி அதிர்ச்சியுடன் கூறியதாவது, “பாதுகாப்பு சோதனையில் எங்களுடைய பைகளை நாங்கள் தந்தபோது, இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், நான் திரும்பி பார்த்தேன். ஒரு நபர் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன், காரிலிருந்து பயணிகளை இறக்கி விடும் பகுதியை நோக்கி நின்றபடி காணப்பட்டுள்ளார். சிலர் கூச்சலிட்டுள்ளனர். கீழே படுத்து கொள்ளும்படி கூறினர். நாங்கள் அந்த பகுதியிலிருந்து தப்பியோடினோம்” என அவர் கூறியுள்ளார். இந்த நிலைமை தற்போது, கட்டுக்குள் உள்ளது என ஆஸ்திரேலிய மத்திய காவல்துறைபடை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரை காவல்துறையினர் பிடித்து சென்றனர். அவரிடமிருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் கிடைத்த தகவலின்படி, துப்பாக்கி சூட்டில் ஒரே நபர் தான் என தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என மக்களிடம் காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.