விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிட்டத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழர் சேதிராயர், மற்றும் விக்ரம சோழ சேதிராயர் ஆவர். இவர்கள் கிபி 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர்.
இவர்களின் உருவ சிலைகள் நெய்வனை கோவிலுக்கு எதிரே இருப்பதாக வரலாற்றின் நூல்களில் படித்து இருக்கிறேன். இந்நிலையில் ஆய்வுக்காக கடந்த 30ஆம் தேதி சொர்ணகடேசிவரர் கோவிலுக்கு சென்றேன். அப்போது அங்கே இருந்த 2 மன்னர்கள் சிலையும் காணவில்லை. அதன்பிறகு இது குறித்து விசாரித்த போது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் யாரோ மர்ம நபர்கள் அந்த சிலைகளை எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன 2 மன்னர்கள் சிலையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.