ஓலா எலெக்ட்ரிக் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி(நாளை) தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு யு வடிவ ஹெட்லேம்ப்கள், எதிர்கால ஸ்டைலிங், பொனெட் நெடுக கிடைமட்ட ஸ்டிரைப் அடங்கிய செடான் மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. அதன் படி ஓலா எலெக்ட்ரிக் செடான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிகமான கி.மீ ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் எம்ஜி ZS EV, டாடா நெக்சான் EV மேக்ஸ் போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர்களின் படி, புது ஓலா எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது.