குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்தவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழமும் உடைய கிணறு உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றுக்குள் இருந்து ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது ஒருவர் உள்ளே இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இருந்தவரை பத்திரமாக மீட்டனர். அதன்பின் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கோவை மாவட்டம் நல்லூர்பாளையம் பகுதியில் வசிக்கும் மவுனராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் நண்பரை தேடி வந்த நிலையில் தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மவுனராஜை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.