மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாகச் செல்வதில்லை. இதனால், மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன் வந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் சேர்த்து விசாரணை நடத்திவருகிறது.
பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா , புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “வைகை ஆறு தொடக்கம் முதல் கடலில் கலக்கும் வரை உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், 5 மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
அவர்கள் வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பொதுப்பணித்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்க்கவேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கிருதுமால் நதி கரையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வேண்டும்.
சிறிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.