Categories
மாநில செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் வீதம், ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் உட்பட பிற அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே பணியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குனர் குணசேகரன் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் வெற்றிச்செல்வி திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்புவதற்கு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், பழனி மாவட்ட கல்வி அலுவலர் கருப்பசாமி, தென்காசி முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் அருள்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் கீதா தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், மத்திய சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் சுந்தர்ராஜ் தொடக்க கல்வித் துறையில் துணை இயக்குநர் பணியிலும், மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலர் குமரன் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிலும், திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் பரம தயாளன் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் பணியிலும் நியமனம் செய்யப்படுகின்றனர்’ என அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |