Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை!…. குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. வெளியான புகைப்படம்…..!!!!

75வது சுதந்திரதினம் இன்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கடற்கரையில் திரண்டு சூரியஉதயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். குமரியில் தற்போது மழை குறைந்ததால் கோதை ஆற்றில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக கோதை ஆற்றின் குறுக்கேயுள்ள குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது.

இதற்கிடையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாபயணிகள் குவிந்தனர். பின் அவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் அருவி அருகிலுள்ள நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்தனர். அதனை தொடர்ந்து அருவி பகுதியிலுள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று போன்றவற்றை கண்டு ரசித்தனர். அதோடு அருவியின் மேல் பகுதியிலுள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். அருவியில் குளிப்பதற்காக வெளியூர், வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் வாகனங்களில் திரண்டு வந்ததால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனினும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போதிய காவல்துறையினர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் வரிசையாக நின்றிருந்ததை காணமுடிந்தது. இது போன்ற விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்ய திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகமும், காவல்துறையினரும் இணைந்து தீர்வுகாண முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோன்று மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை, முட்டம், வட்டக்கோட்டை ஆகிய அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களோடு ஆன்மிகதலங்களுக்கும் சேர்ந்தே சென்று வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

Categories

Tech |