அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதிகளில் சென்ற 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று பலமாக வீசியதால் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது. மேலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோரம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் முறிந்துவிழக்கூடிய நிலையில் இருக்கும் ஆபத்தான மரங்களை கண்டறிந்து வெட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதன் விளைவாக சென்ற இரண்டு நாட்களாக கூந்தலாடி அரசு பள்ளியில் பல வருடங்களாக பாதுகாத்து வந்த மாமரங்கள் வெட்டப்பட்டது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் பொதுமக்கள் கூறியுள்ளதாவது, மா,நாவல், அத்தி உள்ளிட்ட பழ மரங்கள் நிலத்தில் உறுதி தன்மை கொண்டவை ஆகும். ஆனால் எதற்கும் பயன்படாத அந்நிய நாட்டு மரங்கள் எளிதில் உடைந்து விடக் கூடியவை. பழ மரங்களை வளர்ப்பது கடினம். அந்நிய நாட்டு மரங்கள் சில மாதங்களிலேயே பெரிதாக வளர்ந்து விடுகின்றது, எதற்கும் பயன்படாது. ஆகையால் அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் இருக்கும் அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு பழ மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.