துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் போராட்டத்தை உடனடியாக கைவிடவில்லை என்றால் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து கலந்து சென்று நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நகராட்சி அலுவலர்கள் உங்களுக்கு சம்பளம் தர வேண்டியது நாங்கள் இல்லை. நீங்கள் ஒப்பந்ததாரரிடம் தான் சம்பளம் கேட்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்த பிறகு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.